"இந்திய அணுசக்தியின் தந்தை"... அணு ஆயுத நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்பெற மூலகாரணம் "ஹோமி பாபா"
இந்திய அணு இயற்பியல் மற்றும் அணு சக்தி திட்டத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஹோமி ஜஹாங்கீர் பாபா (Homi Jehangir Bhabha) மறைந்த தினம் இன்று. இந்த தினத்தில் அவர் நம் நாட்டிற்காக ஆற்றிய பங்குகள் குறித்து நினைவுகூர்வோம்.
அறிவியல் மீதான காதல்:
ஹோமி ஜஹாங்கீர் பாபா 1909-ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி மும்பை நகரத்தில் ஒரு வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே அறிவியல் மீது தீரா காதல் கொண்டார். அதனால் அறிவியல் தொடர்பான புத்தகங்கள் எங்கு கிடைத்தாலும், நாடி சென்று தேடித்தேடி படித்தார்.
கேம்பிரிட்ஜ் பல்கலை-யில் படிப்பு:
மும்பையில் பள்ளி படிப்பை முடித்தார் . பாபாவின் அறிவியல் ஆர்வத்தை பார்த்த அவரது தந்தை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு பயில இங்கிலாந்து அனுப்பி வைத்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியலில் முதல் வகுப்பில் தேறி பட்டம் பெற்றார். காமா கதிர்களை கவர்வதில் எலக்ட்ரான்களின் பங்கு பற்றி ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டார் பாபா. இதன் மூலம் நியூட்டன் கல்வித்தொகை கிடைக்க, தமது ஆராய்ச்சி மூலம் பட்டை தீட்டி கொண்டார்.
நாடு திரும்பிய பாபா:
பிரிட்டனில் தனது அணு இயற்பியல் வாழ்க்கையைத் தொடங்கிய பாபா, 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன், வருடாந்திர விடுமுறைக்காக இந்தியா திரும்பியிருந்தார். உலகப் போர் காரணமாக அவரை இந்தியாவிலேயே தொடர்ந்து தங்க தீர்மானித்தார்.
இயற்பியல் துறை ஆசிரியராக பணி:
நாடு திரும்பியதும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் துறை ஆசிரியராக பணிபுரிய துவங்கினார் பாபா. அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியர்களும் ஆர்வத்துடன் ஈடுபட காரணமாக இருக்கும் டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகம் (Tata Basic Research Institute), டாக்டர் ஹோமி பாபாவின் பார்வையின் கீழ் சர் டோராப்ஜி டாடா டிரஸ்டின் ஆதரவுடன் இந்த நிறுவனம் விடுதலைக்கு முன்பே 1945-ல் ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து Trombay நகரில் அணு ஆராய்ச்சி மையம் இன்று அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவர்:
அப்போதைய பிரதமர் நேருவை சகோதரர் என்று அழைக்கும் அளவிற்கு நட்பு கொண்டிருந்தார் ஹோமி பாபா. அணு ஆராய்ச்சியில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியத்தை நேருவிடம் பாபா எடுத்துரைத்ததால் தான், இந்திய அணுசக்தி துறையும் அதனை தொடர்ந்து இந்திய அணுசக்தி ஆணையமும் நிறுவப்பட்டது. இதனால் இந்திய அணுசக்தித்துறை மற்றும் இந்திய அணுசக்தி ஆணையம் அமைய காரணமாக இருந்தார். இந்திய அணுசக்தி ஆணையத்தின் முதல் தலைவராக பொறுப்பேற்றார் ஹோமி பாபா.
அணுசக்தி ஆராய்ச்சியில் தன்னிறைவு:
அணு மின்சாரம் தயாரிக்க முக்கிய அடிப்படையான தனிமம் யுரேனியம். இந்தியாவில் குறைவாக கிடைத்த இந்த தனிமத்தின் மூலம் தான் உலக நாடுகள் அணுமின்சாரம் தயாரித்து வந்தன. இந்நிலையில் நம் நாட்டில் இருந்து கிடைத்த தோரியத்தின் மூலம் அணுமின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை வகுத்து, இந்தியா அணுசக்தி ஆராய்ச்சியில் தன்னிறைவு பெற வழிவகுத்தார். தொலைநோக்கு பார்வையுடன், தென்னிந்திய கடற்கரையில் தாராளமாக கிடைத்த தோரியம் தனிமத்தை வைத்து அணுமின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை வடிவமைத்த பெருமை ஹோமி பாபாவையே சேரும். இதனால் தான் இந்தியா தற்போது அணுஆற்றல் மிக்க நாடாக திகழ்கிறது.
ஆசியாவின் முதல் அணுஉலை:
அதே போல ஆசியாவின் முதல் அணுஉலை அமைய காரணமாக இருந்தவரும் ஹோமி பாபா தான். இவரது தீவிர முயற்சியால் தான் 1956ம் ஆண்டு ஆசியாவிலேயே முதல் முதலாக Trombay-யில் அணுஉலை அமைக்கப்பட்டது.
இயற்கை மீது காதல் கொண்ட விஞ்ஞான கலைஞர்:
பெரும்பாலான நேரம் ஆராய்ச்சியிலேயே நேரத்தை கழித்தாலும், இசை மற்றும் ஓவியங்கள் மற்றும் மரங்கள் மீதும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். சக விஞானிகளின் ஓவியங்களை தத்ரூபமாக தீட்டி பிறரை அசத்தினார். டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகம், அணுஆராய்ச்சி மையம் உள்ளிட்டவை இயற்கை எழிலோடு இருக்க மரங்கள் மீது இவர் கொண்ட காதலே காரணம்.மரங்களை வெட்டி விட்டு கட்டிடங்கள் கட்ட திட்டமிட்டபோது, அங்கிருந்த பெரிய பெரிய மரங்களை வெட்டாமல், இடம் மாற்றி வைக்க காரணமாக இருந்தார்.
அகால மரணம்:
1966-ம் ஆண்டு ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்க சென்ற போது நிகழ்ந்த விமான விபத்தில் சிக்கிய ஹோமி பாபா, துரதிர்ஷ்டவசமாக தனது 56-வது வயதிலேயே இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
அணு ஆயுத சோதனையில் இந்தியா:
நாட்டில் உள்ள அணு உலைகள், அணு ஆற்றல் நிலையங்கள் அமைய காரணம் இவரே. இந்தியா அணு ஆற்றலிலும், அணு ஆயுத சோதனையிலும் சிறந்து விளங்க வித்திட்டவர். 1974-ம் ஆண்டு போக்ரான் முதல் அணுசக்தி சோதனையின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் அணு ஆயுத சோதனையில் 6-வது நாடாக இந்தியா இடம் பெற அடிப்படை காரணமும் ஹோமி பாபா தான்.
Comments